போதகர் டேவிட் டி பாஸ்கரன்
1 தீமோத்தேயு:6:10 – 11 “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
11 நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.”
மூத்த ஊழியக்காரராகிய அப்போஸ்தலனாகிய பவுல், இளைஞனாய் இருக்கக்கூடிய ஒரு ஊழியக்காரராகிய தீமோத்தேயுவுக்கு அறிவுரை சொல்லுகிறார்.
அவர் என்ன சொல்லுகிறார் என்றால், “பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது.”
பணம் தீமையல்ல, பணத்தின் மீது வைத்திருக்கிற ஆசை தான் எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது.
எப்பொழுதும் பணம் அவசியம், ஆனால் பணத்தின் மீது ஆசை இருக்கக்கூடாது, பணத்தின் மீது இச்சயாக மாறிவிடக் கூடாது. அப்படி நீங்கள் இருக்கிறீர்களென்றால், பணத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற நிலைமைக்கு போய்விடுவீர்கள்.
1 தீமோத்தேயு:6:5 “கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.”
ஊழியத்தை பணம் வரும் ஆதாயத்தொழிலாக மட்டும் பார்க்கக்கூடாது.
இயேசு கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒவ்வொரு விசுவாசியும், தேவன் எனக்கு எல்லாவற்றையும் தருவார் என்ற மனநிலையில் போகக்கூடாது, நமக்காக உயிரையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்காக வரவேண்டும். தேவனை நேசித்து வர வேண்டும். பணத்திற்காகவும், சுகத்திற்காகவும், பொருளுக்காகவும் வரக்கூடாது. நாம் அவரை விசுவாசிக்கிறோம், அதனால் நாம் அவரை ஆராதிக்கிறோம்.
1 தீமோத்தேயு:3:1-2 “கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.”
நம்முடைய வாழ்கையிலே எல்லா சவால்மிக்க நேரங்களிலும், உண்மையாய் அரவனைத்து நடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
பணத்திற்கு பின்பு ஓடக்கூடிய ஊழியக்காரனாய் இருக்கக்கூடாது. பண ஆசை தவறான ஊழியப்பாதையில் நடத்திவிடும். பணத்தின் மேல் கவனம் வைத்து கர்த்தரை விட்டுவிட்டால் உங்களிடத்தில் இருப்பதையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள்.
கர்த்தர் உங்களோடுக்கூட இருக்கிறார், உங்களை அழைத்து இருக்கிறார் என்றால் உங்களுடைய அத்தனை தேவைகளையும் அவர் பார்த்துக்கொள்ளுவார். கர்த்தரை நம்பி, அவருடைய வேலை உண்மையும், உத்தமமுமாய் செய்கிறவர்களை அவர் ஒருநாளும் கைவிடமாட்டார்.
2 இராஜாக்கள்:5:20-23, 25-27 “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,
21 நாகமானைப் பின் தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டு போக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
22 அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.
23 அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு கைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்து போக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான்.
25 பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.
26 அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
27 ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்.”
எலிசா, எலியாவிற்கு பின்பாக நின்றார், எலியாவை பின்தொடர்ந்து சென்றார், எலியாவின்மேலிருக்கிற அபிஷேகத்தை அவருக்கு இரண்டு மடங்காக பெற்றுக்கொண்டான். எலிசாவின் ஆசை முழுவதும் எலியாவின்மேல் இருக்கிற அபிஷேகம் அவருக்கு இரண்டு மடங்காய் வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஆனால் கேயாசி, பணத்திற்கு பின்னே சென்றார். குஷ்டரோகம் சுகமானதால் தான் காணிக்கை கொடுக்கப்பட்டது. எந்த குஷ்டரோகம் நீங்கினதற்காக காணிக்கை கொடுக்கப்பட்டதோ, அந்த காணிக்கையை வாங்கினதால் குணமான குஷ்டரோகம், ஊழியக்காரர் மேல் வந்துவிட்டது.
எலிசா இராஜாவின் பள்ளி அரையில் பேசுவதைக் கூட கேட்கக்கூடியவர் என்பது கேயாசிக்கு தெரியவில்லை.
நியாயப்பிரமானத்தின் காலத்தில் ஒரு குஷ்டரோகியாய் இருந்து, அவனுக்கு குஷ்டரோகம் சுகமானால்; தேவனுடைய சமுகத்திற்கு சென்று பலியிடவேண்டும்.
கேயாசி பணத்தின்பின் சென்றதினால் அவருக்கு பணம் கிடைத்தது, ஆனால் அவருக்கும் அவருடைய சந்ததிக்கும் எலிசாவின் அபிஷேகம் இரண்டாக கிடைப்பதற்கு பதிலாக நாகமானிடமிருந்த குஷ்டரோகம் அவருக்கும் அவருடைய சந்ததிக்கும் சாபமாக மாறினது.
மனிதர்களுக்கும் பணத்திற்கும் பின்னே செல்வதற்கு பதிலாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு பின் சென்றால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
எந்த வரத்தையும் பணத்தைக் கொண்டு வாங்கமுடியாது.
அப்போஸ்தலர்:8:5-23
“17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
19 நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
21 உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
23 நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.”
உங்களுடைய வரத்தை பிரபலப்படுத்தி உங்களை பிரபலமானவர்களாக காட்டிக்கொண்டு அதன் மூலமாக ஆதாயம் தேட முயற்சி செய்கிற எந்த ஊழியக்காரரும் தேவனுக்காக உண்மையாக ஊழியம் செய்யவில்லை.
கிருபையாய் கொடுக்கப்பட்ட வரம் மக்களுக்கு இலவசமாய் அற்புதங்களை சென்றடைய செய்வதற்காக தேவன் நம்மை ஒரு கருவியாய் பயன்படுத்துகிறார்.
தேவன் நம்மை ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று விசுவாசித்து அபிஷேகித்து இருக்கிறார்.
தேவன் நம்மை அவருடைய வேலைக்காக பயன்படுத்துவதற்காக மட்டும் தான் நமக்கு வரங்களைக் கொடுத்து இருக்கிறார், அதை நாம் அவருடைய வேலைக்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஒருப்போதும் அதை நாம் வியாபாரப் பொருளாக மாற்றக்கூடாது.
யார் நம்மோடுக்கூட வந்தாலும் வராவிட்டாலும் தேவன் நம்மோடுக்கூட இருக்கிறார். யார் நமக்காக ஜெபித்தாலும், ஜெபிக்காவிட்டாலும் தேவன் நம்மோடுக்கூட இருக்கிறார் அவர் நம்மை வழிநடத்துவார்.
மனிதனை முக்கியத்துவப்படுத்துவதைவிட மகத்துவமுள்ள தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
ஊழியம் ஒரு ஆதாயத்தொழில் அல்ல.
கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து ஒரு தலைவராக இருந்தும் தம்முடைய சீஷர்களுடைய கால்களை அவர் கழுவுகிறார், ஏனென்றால் அவர் சீஷர்களோடு ஐக்கியப்பட விரும்புகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு பெரியவராய் இருந்தாலும், அவர் தம்மை தாழ்த்தினார்.
தேவன் உங்களுக்கு கொடுத்த ஊழியத்தையும், வரத்தையும், விசுவாசிகளையும், தேவன் உங்களுக்கு கொடுத்த எல்லாவற்றையும், உங்களை நேசிக்கிறவர்களையும், நமக்கு பணம் கொடுக்ககூடியவைகளை போல நினைத்துவிட்டீர்கள் என்றால் உங்களுடைய ஊழியம் ஒரு சிறப்பான ஊழியமாக இருக்காது.
தேவனுடைய வார்த்தையை சரியாக மக்களுக்கு கொடுத்தால், அவர் தேவனிலும் ஸ்திரப்படுவார்கள், ஆசீர்வதிமாகவும் வாழுவார்கள், அவர்கள் பெருகவும் செய்வார்கள், பெருக்கம் வந்தால் தேவனுக்கு கொடுக்கவும் செய்வார்கள்.
உங்கள் உழைப்பிற்கான பலனை தேவன் உங்களுக்கு நிச்சயமாக தருவார்.
2 தெசலோனேக்கியர்:3:7-12 “இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,
8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
ஊழியக்காரர் என்றால் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதின் அடிப்படையில்லல்ல, பணம் வந்தாலும் வராவிட்டாலும் பரம தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிப்பவர் தான் ஊழியக்காரர்.
பணம் வந்தால் தான் தேவனைப்பற்றி அறிவிப்பேன் என்கிற மனநிலை ஊழியர்களுக்கு இருக்கக்கூடாது.
ஆகவே, விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும் பணத்தைக் குறித்த சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
ஆமென்…